21.9 C
Cañada
Friday, July 5, 2024
spot_img

மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணத் தொகை தரவில்லை’ அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் முடிவு

“தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழக அரசு மொத்தம் ரூபாய் 37,907.19 கோடி ஏற்கெனவே கோரியுள்ளது. இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும்.

மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதோடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்துக்கு வந்து, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை 7-12-2023 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பெருத்த பாதிப்புகளை மத்தியக் குழுவினர் 20-12-2023 அன்று நேரில் பார்வையிட்டனர். மத்திய குழுவினர் இம்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திடத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து தந்திருந்தது.

இதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் 26-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்று, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி 2-1-2024 அன்று தமிழகத்துக்கு வருகை தந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.

ஆனால், மத்தியக் குழுக்களின் வருகைக்குப் பின்னரும், மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டதற்குப் பிறகும், நிவாரணத் தொகை கோரி தமிழக அரசின் சார்பில் இரண்டு கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், மத்திய அரசிடமிருந்து இதுவரை நிவாரணப் பணிகளுக்கென எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் மத்திய அரசு நிவாரண நிதியினை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இரண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும், தமிழக அரசு இதுவரை 2,100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்புத் திட்டத்தினையும் தமிழக அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழக அரசு கோரியுள்ள 37,907.19 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles