5 தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற, ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட நட்சத்திரமான எலைன் தொம்சன் ஹேரா, காயம் காரணமாக பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.ஏற்கெனவே 200 மீற்றர் ஓட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், தற்போது 100 மீற்றர் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.
ரியோ 2016, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங் களை வென்றவர் எலைன் தொம் சன் ஹேரா.அத்துடன், டோக்கியோ 2020 ஒலிம்பிக் 4 X100 மீற்றர் தொடரோட்டப் போட்டியிலும் அவர் தங்கம் வென்றார். ரியோ 2016 ஒலிம்பிக்கில் 4 X100 மீற்றர் தொடரோட்டப் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார். .
உலக வரலாற்றின் மிகச் சிறந்த குறுந்தூர ஓட்ட வீராங்கனைகளில் ஒருவரான அவர், தற்போது உலகிலுள்ளவர்களில் மிக வேகமான வீராங்கனையாக விளங்குகிறார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் அவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், ஒலிம்பிக் 200 மீற்றர் போட்டியிலிருந்து தான் விலகுவதாக அவர் இவ்வார முற்பகுதியில் அறிவித்திருந்தார். எனினும், 100 மீற்றர் போட்டியில் பங்குபற்ற முடியும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.ஆனால், நேற்றுமுன்தினம் (27 June) ஆரம்பமான ஜமைக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் எலைன் தொம்சன் பங்குபற்றவில்லை. இந்நிலையில், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து அவர் வாபஸ் பெற்றுள்ளார்.இதனால், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வெல்லும் அவரின் கனவு கலைந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க க்ரோன் ப்றீ 100 மீற்றர் ஓட்டப்போட்டியின்போது எலைன் தொம்சன் காயமடைந்தார். அதனால், 11.48 விநாடிகளில் ஓடி முடித்து அவர் 9ஆவது இடத்தையே பெற்றார்.2023 ஏப்ரல் மாதத்தின் பின்னர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் பங்குபற்றவில்லை.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தான் வாபஸ் பெற்றுள்ள போதிலும் சக நாட்டவர்களுக்கு, பெரும்பாலும் அரங்குக்கு சென்று, உற்சாகமளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை தவறவிட்டாலும் தனது மெய்வல்லுநர் வாழ்க்கையை தான் தொடரவுள்ளதாகவும் எலைன் தொம்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.